Wednesday, December 2, 2009

கால இயந்திரத்தின் கடும் வெயில்
கணிசமாக குறைகிறது;
பள்ளி முடிந்து வருகின்றன
பாரம் சுமக்கும் பட்டுப் பூக்கள்;
குஞ்சுகளைப் பிரிந்த பறவையினம்
கூடு தேடி வருகின்றன;
இனிய மாலைப் பொழுதை வரவேற்க
கட்டப்படும் மல்லிச் சரங்கள்;
ஆள் நடமாட்டத்தால் மீளுயிர் பெறும்
நிச்சலமாய் இருந்த தெருக்கள்;
நீலமா? பச்சையா? சிகப்பா? வெள்ளையா?
என நிறம் பிரித்தறியமுடியா வானம்;
நொடிக்கொருமுறை வானத்தில்
ஓவியங்களை அழித்து தீற்றும் காற்று;
பிரிந்தவைகள் கூடும் நேரம்,
முடியப் போகும் ஒரு காதல் நாடகம்;
நீல வண்ணக் காதலியுடன் உறவாடியதில்
மேலும் சிவக்கிறான் ஆதவன்;
காலம் செல்ல செல்ல கதிரவன் மனம் மாறுகிறான்;
கடற்காதலியோ நிறம் மாறுகிறாள்.
நீலமும் பச்சையுமாய் இருந்த கடல்ராணி
தன் கதிர்க்காதலனின் பிரிவாள் கலங்குகிறாள்.
குளிர் நீரோ!! இல்லை, கொதியுலைப் பாகோ!!
மறையும் காதலனுக்கு மாயாஜாலம் காட்டுகிறாள்.
மயங்காத மன்னவனுக்கு கொடி போதாதென
இரவையே உடுத்தி எதிர்ப்பை காட்டுகிறாள்.
மறைந்த காதலன் வரும் வேளை பார்த்து
ஏக்கத்துடன் காத்து கிடக்கிறாள்.
இயற்கையின் காதல் நாடகம் முடிய
கடற் காதலியின் வலி என்னுள் ஏற..
என்னுடன் என்னவள் இல்லா நிதர்சனம்
என் உயிரை சுண்டி இழுக்க..
ஏக்கம் மட்டும் தந்து உறக்கம் தரா
என் இரவை எதிர்நோக்கிச் செல்கிறேன்...

No comments:

Post a Comment