இன்றைய நாள், நான் படித்ததில் பிடித்தது………….
நவம்பர் 23, 2009 by muilavarasan குருவிடம் சிஷ்யன் சொன்னான்.“தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?”
“மகனே.. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?” குரு கேட்டார்.
“புரியவில்லை குருவே..”
“எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?”
“எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்..”
“கழுதையைப் பின்னால் தட்டினால்?”
“தட்டியவரை எட்டி உதைக்கும்..”
“ஆனால் குதிரை..?”
“முன்னால் பாய்ந்து செல்லும்..”
“புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்..”
சிஷ்யன் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றான்.
—————————————————————–
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
“நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.”
நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்
எனக்கு அனுப்பியவர் – நண்பர் –ராஜ்

No comments:
Post a Comment